2.5 மில்லியன் டொலர் காணாமல் போன விவகாரம் குறித்த புதிய தகவல்கள் அம்பலம்
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், ஹெக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்கிற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், புதிய தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
திறைசேரி அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் வந்த ஒரு விலைப்பட்டியலை மட்டுமே நம்பி, அசல் ஒப்பந்தத்தைக்கூடச் சரிபார்க்காமல் இந்தத் தொகையைச் செலுத்தியுள்ளனர் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை, திறைசேரி ஊடாகக் கடன் மீள் செலுத்துகை மேற்கொள்ளப்பட்ட போது, அந்தத் தொகை ஹெக்கர்களின் கணக்கிற்குச் சென்ற சர்ச்சை குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வந்த விலைப்பட்டியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அசல் கடன் ஒப்பந்தம் குறித்து எந்தவொரு கூடுதல் சரிபார்ப்போ அல்லது விளக்கமோ கோராமல் இந்தப் பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர் என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்தத் தவறான பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இணைய சர்வர் அமைப்பின் தரவுகள் நகலெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தரவுகள் அடங்கிய நான்கு சிடிக்கள், பகுப்பாய்வு மற்றும் அறிக்கைக்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி தடய அறிவியல் பிரிவுக்கு அனுப்பப்படவுள்ளன.
இதற்கான தடய அறிவியல் பரிசோதனை உத்தரவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 42 நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணப் பரிசோதனை அறிக்கையின் நகலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையை வரும் ஜூலை 8 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். அடுத்த விசாரணையின் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri