சப்ரகமுவாவில் நடைபெற்ற குறிஞ்சி மலர் நிகழ்வு
சப்ரகமுவ பிரதேசத்தில் மலையக வருடாந்த குறிஞ்சி மலர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
காவேரிக் கலா மன்றம் கிளிநொச்சி நகர ரோட்ரிக் கழம் ஆகியன இணைந்து வருடாந்தம் நடத்தும் நிகழ்வாக இது அமைந்திருக்கிறது.
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள மலையக தமிழ் தோட்டப்புற பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு சிறந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்களையும் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இது திட்டமிடப்படுகின்றது.
இந்நிகழ்வு நேற்று (18.11.2024) இரத்தினபுரி புதிய நகர சமுதி வரவேற்பு மண்டபத்தில் காவேரிக் கலா மன்றத்தின் இயக்குனர் வண யோசுவா தலைமையில் இடம்பெற்றது.
விருந்தினர்கள்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி, இங்கிலாந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜெனிபர் ஸ்மித் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி ரோட்ரிக் கழகத்தின் தலைவர் இ. ஜயசீலன், இலங்கை திறந்த பல்கலைக்கழக இணைப்பாளர் ஓய்வு நிலை அதிபர் பெருமாள் கணேசன், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் அ.பங்கையற்செல்வன், தொழிலதிர் ந. சிவகுமார்,க. ரதிகுமார் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கௌரவிப்பும் பரிசில்களும்
இதன் போது தமிழ், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், வரலாறு, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய கற்கைத் துறைகளில் சிறந்த பரீட்சைப் பேறுகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு இப்பாடத்துறைகளில் கற்பித்தலை மேற்கொண்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
ஒன்பது ஏ. சித்திகளைப் பெற்ற மாணவர், மாணவிகளையும் பாராட்டி பணப்பரிசுகள், சான்றிதழ்கள், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.