பிரித்தானியாவில் சிறையிலிருந்து தப்பிய மிகவும் ஆபத்தான நபர்! மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நபர் என முத்திரைக்குத்தப்பட்ட பாலியல் குற்றவாளி ஒருவர் திறந்த சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
56 வயதான போல் ராப்சன், பெண் ஒருவரி வீட்டிற்குள் நுழைந்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டிற்கு, அவருக்கு 2000ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், லிங்கன்ஷையரில் உள்ள HMP நோர்த் சீ முகாமில் இருந்து நேற்றைய தினம் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூகேஸில் பிறந்த ராப்சன் "நாட்டில் எங்கும்" இருக்கலாம் என்று கூறிய பொலிஸார், அவரை அணுக வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளனர்.
ராப்சன் ஒக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார முயற்சி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை அநாகரீகமான முறையில் தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
வழுக்கைத் தலை மற்றும் நீண்ட தாடியுடன் மெலிந்த உடலமைப்புடன் இருப்பார் என ராப்சனை பொலிஸார் விவரித்துள்ளனர். ராப்சன் போஸ்டன் பகுதியில் இருப்பதாக முதலில் பொலிஸார் நம்பினர். ஆனால் தற்போது அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை "நீங்கள் பார்த்தால், தயவுசெய்து அவரை அணுக முயற்சிக்காதீர்கள் அல்லது அவரை நீங்களே கைது செய்ய முயற்சிக்காதீர்கள். "அவர் பொதுமக்களுக்கு உண்மையான ஆபத்தை ஏற்படுத்த கூடியவர்.
அவரைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.