இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீடித்துவரும் நிலையில், சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவுக்கு அவசர சத்திரசிகிச்சை பொருட்கள் தேவைப்படுவதால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விரைவாக சத்திர சிகிச்சைக்கான பொருட்கள் தீர்ந்து வருவதாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அறுவை சிகிச்சை பொருட்களை சிக்கனமாக பாவித்து வரையறுக்கப்பட்ட பொருட்களின் பாவிப்பு திறனை நீட்டிக்க நிபுணர்கள் முயற்சித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகள் தடைப்படும் அபாயம்
தமது கையிருப்பு முடிந்த பின்னர், தம்மால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது எனவும், வளரும் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சைகளை தள்ளிப் போட முடியாது எனவும் கூறியுள்ள நிபுணர்கள், இது தொடர்பில் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக அத்தியாவசிய சத்திரசிகிச்சைப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொது உதவிக்கு வைத்தியசாலை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளூர் சந்தையில் கிடைக்கும்,நோயாளர்களுக்கு கட்டுப்படியாகாத இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நன்கொடையாளர்கள் உதவ வேண்டும் எனவும் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் திமுத்து தென்னகோன் மற்றும் அவரது குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே தேவையான பொருட்களை நன்கொடையாளர்கள் நேரடியாக விநியோகஸ்த்தர்களிடம் இருந்து
கொள்முதல் செய்யலாம் அல்லது தமது வைத்தியசாலைக்கு
விநியோகிக்க முடியும் எனவும் உதவிகோரியுள்ளனர்.