இலங்கையில் உள்ள நண்பர்களுக்கு டொலர்கள் கொடுத்து உதவப் போகும் வெளிநாட்டவர்கள்! அறிமுகமாகும் செயலி
வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இலங்கையில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு லிட்ரோ எரிவாயுவினை பெற்றுக் கொடுக்கும் நடைமுறை அடுத்த வாரம் முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசியில் உள்ள செயலியின் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு லிட்ரோ எரிவாயுவினை பெற்றுக்கொடுக்கும் முறைமை தொடர்பான தகவல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.
வீடுகளுக்கே எரிவாயு
டொலரில் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் இவ்வாறு லிட்ரோ எரிவாயுவினை தங்களது உறவுகளுக்குப் பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட லிட்ரோ நிறுவனத் தலைவர் முமதித பீரிஸ்,
வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இதனூடாக எந்தவொரு நபருக்கும் இதற்கான செயலி ஊடாக கட்டணத்தை செலுத்தி தங்களது வீடுகளுக்கே எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும். அடுத்த வாரம் முதல் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வாக இது அமையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை குறைப்பு
இதேவேளை, நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100 முதல் 200 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.