சீன கப்பல் குறித்து இந்தியாவுக்கு உறுதியளிக்க அவசர முயற்சி
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீனாவின் கப்பல், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என இந்திய அரசாங்கத்திற்கு உறுதியளிக்க அவசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த விடயம் பாதுகாப்பு அமைச்சினால் வழிநடத்தப்பட்டிருக்கக்கூடாது. மாறாக இது தொடர்பான அனைத்து தகவல் தொடர்புகளும் வெளியுறவு அமைச்சகத்தால் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கும் யுவான் வாங் 5 ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டையில் தரித்திருக்கும். இந்த கப்பல் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீன கப்பலின் திட்டமிடப்பட்ட வருகை
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் இந்திய அரசாங்கம் 'கவனமாக கண்காணித்து வருகிறது என்று இது தொடர்பில் இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் சீனாவின் கடல், அறிவியல், ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியாக புரிந்துக்கொண்டால்,சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீனா கூறியுள்ளது.
இந்த நிலையில், இது போன்ற விடயங்களில், பங்குதாரர்களுடன் விரிவான விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் தலையிடாமல், வெளியுறவு அமைச்சிடம் இந்த விடயம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு
முதலில் மறுத்தமையானது, சர்வதேச ஊடகங்களில் தேவையற்ற சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது என போகொல்லாகம தெரிவித்துள்ளார்.