பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
திங்கட்கிழமை (20) மாலை நடைபெற்ற குறித்த சந்திப்பில் பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் மற்றும் அதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
அத்துடன் பல்கலைக்கழக ஊழியர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கான வெற்றிடங்களை நிரப்புதல், அவர்களை பல்கலைக்கழக சேவையில் தக்க வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி
இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் பீ.ஆர். வீரதுங்க, செயலாளர் சாருதத்த இளங்கசிங்க உள்ளிட்ட இன்னும் பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.




