ஜெனிவா வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்..! நெருக்கடியை சந்திக்கும் ஈழத்தமிழர் தரப்பு (Video)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06.10.2022) நடைபெறவுள்ளது.
ஐ.நா அமர்வு
கடந்த மாதம் 12ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு தொடங்கியது.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தயாரித்துள்ளன.
இந்தத் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளது.
இதேவேளை, குறித்த பிரேரணைக்கு இலங்கை தமது ஆட்சேபனையை முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இம்முறை வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு சாதகமான நிலைமையொன்றே ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்களிப்பு தொடர்பான நிலவரம்
அதாவது இம்முறை இலங்கைக்கு ஆதரவாக அதிகமான வாக்குகள் பதிவாகுவதற்கான சாத்தியமும், நடுநிலையான வாக்குகள் பதிவாவதற்கான சாத்தியமும் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்பின் பின்னர் வந்த பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் முடிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என நம்பப்பட்டது.
எனினும் பைடன் ட்ரம்பிற்கு முன்னதான நிர்வாகம் போன்று நிலைமையை கொண்டு வந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் தரப்பு மேற்குலத்தை மாத்திரம் நம்பியிருக்காமல் ஒடுக்கப்பட்ட நாடுகளை நாடியிருந்தால் இதில் சாதகமான நிலைமை கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக போன்றல்லாமல் இம்முறை இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ அதிகளவு வாக்குகள் பதிவாகும் சாத்தியக்கூறு அதிகளவில் இருப்பதாக பேசப்படுகிறது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் தரப்போ, அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் ஈழத்தமிழர் தரப்புக்களோ தமது பக்கம் ஆதரவை ஈர்த்துக் கொள்வதற்கான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டது மிகவும் குறைவு என்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வெறும் அறிக்கைகளுடன் மாத்திரமே ஆதரவு கோரும் நடவடிக்கையானது நின்றமை தற்போது தமிழர் தரப்பிற்கு பின்னடைவு ஏற்பட சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமைக்கு காரணமாக இருக்கின்றதாக கூறப்படுகிறது.
வழமையை விட இம்முறை வாக்கெடுப்பானது சவாலாக காணப்படுவதற்கான காரணம் சீனா வெளிப்படையாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் அதாவது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடன் இணைந்து சீனா பல நாடுகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த நடவடிக்கையாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரித்தானியாவில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையும் இந்த பின்னடைவிற்கான முக்கிய காரணம். இதனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் தரப்பு நம்பியிருந்த நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மேற்குலக நாடுகள் ஆதரவு தருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவான மட்டத்திலேயே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
