ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு எதிராக பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டு: முஜிபுர் ரஹ்மான்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிராக முதல் தடவையாகப் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது.
இதில் இலங்கையின் மனித உரிமை தொடர்பில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்தப் பிரேரணை தற்போது வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டு
அதேபோன்று கடந்த 12 மாதங்களில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கத்திற்கு முடியாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
புதிய பிரேரணையில் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிராக முதல் தடவையாக பொருளாதார மோசடி குற்றச்சாட்டை வைத்திருக்கின்றது.
இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறான குற்றச்சாட்டை இலங்கைக்கு எதிராகத் தெரிவித்ததில்லை.
அரசாங்கம் நிதி மோசடி செய்துள்ளதை சர்வதேச நாடுகள் சந்தேகிப்பதே இதற்குக்
காரணமாகும்" என்றார்.