இலங்கையின் விஜயத்தை நிறைவு செய்த ஐ.நா பிரதிநிதி: முதலீடுகள் தொடர்பில் ஆராய்வு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கன்னி விக்னராஜா, இலங்கையில் தனது சந்திப்புகளை முடித்துக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்புக்கள், மீட்பு முயற்சிகளுக்கு பங்களிப்பு மற்றும் அபிவிருத்தி நிதியுதவிகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட கலந்துரையாடல்
கன்னி விக்னராஜா தனது குறுகிய கால விஜயத்தின் போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உட்பட பல தரப்பினருடன் உயர்மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் அவர் இலங்கைக்கான ஜப்பானின் விசேட மற்றும் முழுமையான அதிகாரம் கொண்ட தூதுவர் மிசுகோ ஷி ஹிடேகியையும் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பிற்போக்கு வரிக் கொள்கைகள் ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு அதிக முதலீடுகள் மற்றும் ஊக்குவிப்புகளின் அவசியத்தையும் விக்னராஜா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |