அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்: பிள்ளையான் (Photos)
அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் இன்றைய தினம் (05.03.2023) நீர்பாய்ச்சல் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் உன்னிச்சை நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள நாவற்காடு - பாலக்காடு நீர்ப்பாய்ச்சல் கால்வாயை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது பிள்ளையான் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உணவு தட்டுப்பாடு
உற்பத்தி துறையை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏற்றுமதி பயிர் பதிலிடல் அதை தயார்படுத்தல் அதை எவ்வாறு பொதிசெய்தல் போன்ற விடயங்களை நாம் தீவிரமான ஆர்வம் காட்ட வேண்டும்.
அதற்கான தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது.
உணவு தட்டுப்பாடு என்பது இலங்கையில் மாத்திரம் அல்லாது உலகம் பூராகவும் ஏற்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெயின் விலை மிக சடுதியாக அதிகரித்துள்ளது.
ஐரோப்பா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இலங்கை தேங்காய் எண்ணையின் தேவைப்பாடு அதிகமாக தற்போது காணப்படுகின்றது.
இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நாம் இன்னும் எங்களது பகுதிகளில் அவற்றை இனம் கண்டு கொள்ளவில்லை.
மோசமான பொருளாதார பிரச்சினை
கிராமிய உற்பத்தியில் கச்சான் தொடக்கம் முந்திரி பருப்பு வரை சரியான முடிவு பொருளாக நாம் செய்யவில்லை நிர்ணய விலை இன்று வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள் .
இவற்றையெல்லாம் ஈடு செய்யக்கூடிய தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி விவசாய அமைப்புகள் பொது அமைப்புக்கள் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் .
அரசாங்கம் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் மிக மோசமான பொருளாதார பிரச்சினை காரணமாக எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது .
நீர் பாசன திட்டங்கள்
நாம் நம்புகின்றோம் 2023 , 2024 ஆம் ஆண்டுகளில் பயிர்களுக்கான நீர் பாசன திட்டங்களையும் கிராமிய வீதிகளையும் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.
எல்லா வீதிகளையும் செய்து தருவேன் என்று என்னால் கூற முடியாது. உண்மையாகவே
விவசாயிகள் அந்த உழவியந்திரத்தைக் கொண்டு செல்லுகின்ற முக்கியமான பாதைகளை
செப்பணிட்டு தருவதற்கு முயற்சி எடுக்கப்படும் .
எனது அமைச்சிலும் 10 மில்லியனுக்கு மேலான பணம் இருக்கின்றது.
அதில் ஒரு மூன்று மில்லியன் ஆவது எமது மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் வேலை செய்வதற்காக எதிர்பார்த்து இருக்கின்றேன்.
நிச்சயமாக எமக்கு வாக்களித்தவர்கள் என்ற காரணத்தினால் தூய்மையான வேலை திட்டத்தை செய்து கொடுப்பேன் என தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எனக்குத் தெரியும் விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது.
ஆகவே நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கால்வாயை புனரமைப்பதற்கான திட்டங்கள்
23 வருடத்திற்கு முன்பாக குறித்த கால்வாயை புனரமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலமும் குறித்த திட்டம் நடைமுறைப்படுதப்படாத நிலையில் குறித்த திட்டம் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னிச்சைகுளத்திலுள்ள நீரை சுமார் 21கிலோமீற்றர் தூரமுள்ள நாவற்காடு - பாலக்காடு நீர்ப்பாய்ச்சல் கால்வாய் காணப்படுகின்ற நிலையில் இந்த கால்வாய் புனரமைக்கப்படுவதன் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகளின் விவசாய செய்கையினை செய்யமுடியும் எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விவசாயிகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் முன்னுரிமையின் அடிப்படையில் இந்த கால்வாய் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நீர்பாசனதிணைக்களத்தின் பணிப்பாளர் நாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், கமக்கார அமைப்புகளின் அதிகாரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.




