சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்
சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தம்
இதற்கிடையே பகிடிவதை செய்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட ஐந்து மாணவிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, அவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக தாம் ஐவரும் கடுமையான மன அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகவும், தாம் வீடுகளுக்குப் பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் குறித்த ஐந்து மாணவிகளும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பயண ஏற்பாடுகள்
அதன் பிரகாரம் அவர்களுக்கான பயண ஏற்பாடுகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு சப்ரகமு பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிர்வரும் 08ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதுடன், சகல மாணவர்களையும் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |