யு.என்.டி.பி. திட்டங்களின் உண்மை தாக்கங்களை மதிப்பீடு செய்வது அவசியம் - வடக்கு ஆளுநர்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (21.05.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
தற்போதைய நிலைப்பாடுகள்
யு.என்.டி.பி. நிறுவனம் வட மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுத்த பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதும், அவற்றின் தற்போதைய நிலைப்பாடுகள் மற்றும் அடைவுகளை ஆராய்வதுமே சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, கடந்த காலத் திட்டங்களின் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தில் மாகாணத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் ஆளுநரின் இணைப்புச் செயலாளரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





