உண்டியல் முறையில் அதிகளவு பணம் அனுப்பப்படுகின்றது - பிரதமர் கவலை
உத்தியோகபூர்வ வழிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் இன்னும் உண்டியல் மற்றும் பிற முறைசாரா முறைகள் மூலம் நாட்டிற்கு நிதியை அனுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாய் மதிப்பு சரிந்ததே இதற்கு காரணம் என்று பிரதமர் கூறினார். நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாகவும், பணம் அனுப்புவதற்கு மேலதிகமாக அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடம் முதல் இலங்கையர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் பணம் அனுப்புவார்கள் என எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.