மன்னாரில் அனுமதியின்றி நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகள் - பிரதமருக்கு அவசர கடிதம்
மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடை பெறுகின்ற சில அபிவிருத்தி செயற்பாடுகள் பிரதேச சபையின் அனுமதியின்றியும், பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வராமலும் இடம்பெற்று வருகின்றமை தொடர்பாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் இன்றையதினம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆகிய நான் இப்பிரதேசத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவன் என்ற வகையிலும் யுத்தத்தின் ஆறாத வடுக்களினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைப்பவன் என்ற வகையிலும் இப்பிரதேசத்தில் நடை பெறுகின்ற அபிவிருத்திகளுக்கு முற்று முழுதாக என்னுடைய ஆதரவையும் இப்பிரதேச சபையின் ஆதரவையும் தருவதோடு அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்.
அத்தோடு இப்பிரதேசத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளுக்குப் பங்களிக்கின்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தினூடாக ஒரு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளும் அப்பிரதேச சபையின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அவ்வாறு அனுமதியின்றி நடை பெறுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்நாட்டின் சட்டத்தை மதிக்கின்ற ஒரு பிரஜை என்ற வகையில் தாங்கள் அனுமதிக்கமாட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன்.எனினும் எமது மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற சில அபிவிருத்தி செயற்பாடுகள் எமது அனுமதியின்றியும், எமது கவனத்திற்குக் கொண்டுவராமலும் இடம்பெறுகின்றது.
குறித்த செயற்பாடு தொடர்பாக மிகவும் மனவேதனையுடன் உங்களுக்கு அறியத் தருவதோடு, அவற்றை மேற்கொள்பவர்கள் உங்களுடைய பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.
இவ்வாறான ஒரு கடிதம் முன்பும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை. எனவே இதனைக் கவனத்தில் கொண்டு இதற்கான மிக விரைவான தீர்வை வழங்குவீர்கள் என்பதை உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றேன் எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை(4) காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹர் குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு வந்தார்.








உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
