மே18ல் கவனத்தைப்பெற்ற ஐ.நா பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் பேருரை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது. கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவும் என ஐ.நாவின் முன்னாள் சிறப்புப் பிரதிநிதியின் அடமா டியங்கின் தெரிவித்துள்ளார்.
தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்புப் பிரதிநிதியின் அடமா டியங்கின் முள்ளிவாய்க்கால் பேருரை பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.
செனகல் நாட்டைச் சேர்ந்தவரான சட்டநிபுணர் அடமா டியங்க், 2012ம் ஆண்டு ஐ. நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தவர்.
செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பொறுப்புக்களை வகித்து வந்த இவர், 2001 ஆம் ஆண்டு முதல் றுவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் பதிவாளராக இருந்திருக்கின்றார்.
அத்துடன் சர்வதேச நீதியரசர்கள் ஆணைக்குழுவிலும் நீண்டகாலம் செயற்பட்டவராவர். 1995 முதல் 2000 வரை ஹெய்ட்டி நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணராகவும் இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட அடமா டியங், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்த்தியிருந்த ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரை நிகழ்வில் பங்கெடுத்து 'இலங்கையில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரிகாரநீதி நடவடிக்கைகளின் நிலைவர மதிப்பீடு' எனும் தொனிப்பொருளில் தனது பேருரையினை வழங்கியிருந்தார்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்தும் அதில் உயிர்தப்பியோரின் வலிகளுக்கு மரியாதை செலுத்தியும் நினைவுரையை வழங்குவதாக குறித்துரைத்த அவரது முள்ளிவாய்க்கால் பேருரையில் தெரிவிக்கையில்,
நினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியாது.
முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவு மயப்படுத்தல்களும் உலகில் இது போன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. இலங்கை விடயத்தில் பரிகார நீதி நடவடிக்கைகள் சர்வதேச குற்றங்களுக்கு உட்பட்டதாகவோ அன்றித் தேசங்களுக்கு உட்பட்டவையாகவோ எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச்செய்யப்படுகின்ற போதுதான் உண்மையான பொறுப்புக் கூறலாக அமைய முடியும்.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது. கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவும்.
தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத - அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள- அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை உருவாக்குவதை இலங்கை விடயத்தில் நாங்கள் கண்டுள்ளோம்.
அவ்வாறு ஓர் அரசு செயற்படுமாயின், தன்னுடைய பொறுப்புக் கூறலிலிருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
ஆனால் எந்த மண்ணில் கொடுமைகள் நிகழ்ந்தனவோ அந்த நாட்டின் அரசு என்ற வகையில் இலங்கையைத் தள்ளிவைத்து விட்டுப் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுவிடவும் முடியாது.
'கோவிட்' வைரஸ் நிலைமைகளுக்குப் பின்னர் அதை ஒரு சாட்டாக அல்லது காரணமாகப் பயன்படுத்திப் பொறுப்புக் கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளிலிருந்து சிறிலங்கா அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது.
இலங்கையில் தற்போதைய ஆட்சியில் ஒரு பாரதூரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அதன் நடவடிக்கைகளை 'முரண்பாடுகளுக்கான விதைகளைத் தூவுதல்' என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றை முன்னாள் ஐ. நா. செயலாளர்களுடன் இணைந்து வெளியிட்டது.
இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. ஜனநாயகத்துக்கான இடைவெளி அங்கு சுருங்கி வருகின்றது என்ற எச்சரிக்கையை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது என அவரது உரையின் முக்கிய பகுதிகள் அமைந்திருந்தன.
நிகழ்வில் அடமா டியங்கின் ஆங்கில உரையினை பிழிவினை பேராசிரியர் சந்திரகாந்தன் அவர்கள் தமிழாக்கம் செய்து வழங்கியிருந்தார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற
நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, சர்வதேச
தளத்தில் தங்களுக்குச் சவாலாக இருப்பதாகச் இலங்கையின் வெளி விவகாரச்செயலர்
தெரிவித்து வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த
இந்நிகழ்வொன்றில் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி
ஒருவரது பங்கெடுத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
