ஐநா சபையில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அவமானம்! - வெளிநடப்பு செய்த ராஜதந்திரிகள் (Video)
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ராஜதந்திர புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐ.நா மாநாடு இரண்டிலும் உரையாற்றிய லாவ்ரோவ், பேசத் தொடங்கியபோது, மேற்கத்திய தூதர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி இணைப்பு வழியாக பேச ஆரம்பித்த உடனேயே மேற்கத்திய தூதர்களால் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனையடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்ற போதும் அங்கு அறைகள் வெறுமையாக காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளன. பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையிலேயே, ரஷ்யாவை புறக்கணிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து மேற்கத்திய தூதர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவின் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதிக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நீண்ட கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.