பிரித்தானிய தேர்தல் வெற்றியின் பின்னர் உமா குமரனின் உறுதிமொழி
வரலாற்றில் முதன் முறையாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ் பெண் உமா குமரன் சமூக நீதிக்காக குரல் கொடுப்பேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தொழிற்கட்சியை தெரிவு செய்தமைக்கும் எனக்கு வாக்களித்தமைக்கும் நன்றி பாராட்டுகின்றேன்.
வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்
நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றுவதற்கு நீங்கள் எனக்கு அளித்த சந்தர்ப்பத்தை நான் ஒரு வரப்பிரசாதமாக கருதுகின்றேன், இந்தத் தொகுதி தொழிற்கட்சியின் பிறந்த இடமாகும்.
ஐக்கியம் என்ற ஓர் தொனிப்பொருளில் நாம் இன்று வெற்றியை அடைந்துள்ளோம், அதனை என்னால் பெருமிதமாக கூற முடியும் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நான் பூரணமாக உணர்ந்து கொண்டுள்ளேன்.
உங்கள் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்து மக்களுக்கு சேவையாற்றுவேன். அரசியல் எல்லோருக்கும் பொருத்தமானது அல்ல என அனேகமானவர்கள் அறிவுரை கூறினார்கள் எனினும் நான் அதனை பொய்ப்பித்து இங்கு இன்று நிற்கின்றேன்.
தொழிற்கட்சி இன்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே கடந்த 14 ஆண்டுகளாக நாம் எதிர் நோக்கிய தோல்வியிலிருந்து மீள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
வீடமைப்பு திட்டங்கள்
நான் கிழக்கு லண்டனில் பிறந்தேன், நான் ஓர் தமிழ் ஏதிலிப் பெற்றோரின் பிள்ளையாவேன் எனவும், அடக்குமுறைகள் தண்டனைகள் என்பவற்றை கடந்து வந்த அனுபவம் எமக்கு உண்டு.
எனவே நான் எப்பொழுதும் நீதியின் பக்கம் நின்று சேவையாற்றுவேன், பிரித்தானியா இரு கரங்களிலும் எனது பெற்றோரை வரவேற்று அவர்களுடைய வாழ்க்கையை மீளக் கட்டி எழுப்ப உதவியது.
இந்தப் பெறுமதிகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். வீடமைப்பு திட்டங்கள் சமூகநீதி போன்றவற்றிற்காக குரல் கொடுக்க தயங்க போவதில்லை.
பெண்கள் பகலிலும் இரவிலும் பாதுகாப்பாக வீதிகளில் நடந்து செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். நல்ல பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
தொழிற்கட்சி எப்பொழுதும் நாட்டை ஐக்கிய படுத்துமே தவிர பிளவுபடுத்தாது, உங்கள் பிரச்சனைகள் எனது பிரச்சனைகளாகும் உங்களது சவால்கள் எனது சவால்களாகும் என உமா குமரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |