போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள உக்ரைன் படையினர்
உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் 5,000 க்கும் மேற்பட்ட உக்ரைனிய படையினர் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய சார்பு கிளர்ச்சித் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.
டொன்பாஸ் பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
டொன்பாஸ் பிராந்தியத்தில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று லைமான் நகர் தமது தரப்பால் கைப்பற்றப்பட்டதாக ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள லைமான் நகர்
ரஷ்ய படையினரின் ஆதரவுடன் லைமான் நகரின் கட்டுப்பாட்டை தாங்கள் எடுத்துக்கொண்டதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
லைமன் நகர் தற்போது கைப்பற்றப்பட்டிருப்பதால் ஸ்லோவியன்ஸ்க், மற்றும் கிராமடோர்ஸ்க் ஆகிய நகரங்களை நோக்கிய படைநகர்வு இனிமேல் இடம்பெறுமென ரஷ்யத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுஹான்ஸ்க் பகுதியில் கடுமையான மோதல்
இந்த நிலையில் லுஹான்ஸ்க் பகுதியில் கடுமையான மோதல்கள் தொடர்வதாக அறிவித்துள்ள உக்ரைனிய இராணுவத்தரப்பு டொன்பாஸ் பிராந்தியத்தில் தமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் டொன்பாஸ் பிராந்தியத்தில் 5,000 க்கும் மேற்பட்ட உக்ரைனிய படையினர் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யசார்பு கிளர்ச்சியாளர்கள் உரிமைகோரியவிடயம் குறித்து உக்ரைனியதரப்பு எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் உக்ரைனுக்கு போர்த்தாங்கினளை வழங்குவதான ஜேர்மனி அறிவித்தபோதிலும் அவ்வாறு அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர் ஜேர்மனி தனது வாக்குறுதிகளை மதிக்கவில்லையென போலந்து குற்றஞ்சாட்டியுள்ளது.