தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா பதற்றம்! - பிரித்தானிய பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம் காரணமாக அடுத்த சில நாட்கள் "மிகவும் ஆபத்தான தருணம்" என்று பிரித்தானிய போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை மீள அழைக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதிக்கு போரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான நேட்டோ நட்பு நாடுகளுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரஸ்ஸல்ஸ் மற்றும் போலந்திற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் விஜயம் செய்துள்ளார்.
போலந்து பிரதமர் Mateusz Morawiecki உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வார்சாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போரிஸ் ஜோன்சன், பிரித்தானியா நேட்டோ நட்பு நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கிறது என தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்கள் மிகவும் ஆபத்தான தருணம்
ரஷ்யா மீதான பிரித்தானிய உளவுத்துறை "கடுமையாக உள்ளது" என்றும், உக்ரைன் எல்லையில் பெரும் எண்ணிக்கையில்" ரஷ்ய துருப்புக்கள் குவிந்திருப்பதாகவும் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
"பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவிற்கு அடுத்த சில நாட்களில் இது மிகவும் ஆபத்தான தருணம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக பிரித்தானிய மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரம் அடையும் உக்ரைன் - ரஷ்யா பதற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஐக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.
சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும். ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை.
போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.