போர் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா போட்ட திட்டம் - அம்பலமான தகவல்
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதன் இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவரை கொல்ல திட்டமிட்ட ரஷ்ய உளவுத்துறையில் பணிபுரியும் இருவரை உக்ரைன் கைது செய்துள்ளது.
குறித்த குழுவானது மூன்று படுகொலைகளுக்கு திட்டமிட்டதாகவும், தற்போது உக்ரைன் பாதுகாப்பு அமைப்பினால் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் கைரிலோ புடானோவ் மற்றும் ஒரு முக்கிய உக்ரேனிய சமூக ஆர்வலர் ஆகிய மூவரையும் ரஷ்ய உளவுத்துறை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆனால், குறித்த திட்டம் முறியடிக்கப்பட்டு, ரஷ்யாவின் பங்கு அம்பலமான நிலையில், இது தொடர்பில் ரஷ்யாவிடம் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
கைதானவர்களில் ஒருவர் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் குடியிருப்பவர் எனவும் இன்னொருவர் தலைநகர் கீவ் பகுதியை சேர்ந்தவர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுகொலைக்கும் 150,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என ரஷ்ய உளவுத்துறை வாக்குறுதி அளித்துள்ளதாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லுஹான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த அந்த கொலைகாரன் பெலாரஸிலிருந்து உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார் எனவும் வடமேற்கு உக்ரைனில் உள்ள கோவெல் நகரில் கீவ் குடியிருப்பாளருடன் கைது செய்யப்பட்டார் எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், முதன்மை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உக்ரைன் அரசு பல அடுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.
அத்துடன், தலைநகர் கீவில் அரசாங்க மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது.