இராணுவத்தளங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்! மீண்டும் தீவிரமடையும் ஆளில்லா விமான தாக்குதல்
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள இராணுவத்தளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், 60 ஆளில்லா விமானங்களை கொண்டு இன்று ரஷ்யா கடுமையாக தாக்கியுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ், கருங்கடல் நகரான ஒடிசா மற்றும் பிற நகரங்களை இலக்காக கொண்டு, ரஷ்யா இன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட 60 கமிகேஜ் ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா இன்று கடுமையான தாக்குதலை தொடுத்து பல்வேறு கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் கீவ் நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இராணுவ உபகரணங்கள் அழிப்பு
இந்த தாக்குதலையடுத்து 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்,பாக்முட், டொனெட்ஸ்க், குப்யான்ஸ்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பாக்முட் மற்றும் மரின்காவைச் சுற்றி கடுமையான மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் கவச வாகனங்கள், வெடிமருந்து கிடங்குகள், இராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.