24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! இராணுவம் வெளியிட்ட தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் 1,030 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 133,190 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
குவியும் சடலங்கள்
இந்நிலையில் கடந்த ஒரு வருட கால யுத்தத்தில் ஒரே நாளில் முதன்முறையாக அதிகளவு ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
டான்பாஸ் நகருக்கு அருகிலுள்ள பாக்முத் பகுதியைச் சுற்றி நடந்த மோதல் உயிரிழப்பிற்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் 25 ரஷ்ய டாங்கிகள் அழிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் மொத்தம் 3,245 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனவரியில் மட்டும் 6,500 உக்ரைன் வீரர்களை கொன்றுள்ளதாக ரஷ்ய தரப்பும் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பு வெளியிடும் இறப்பு எண்ணிக்கையானது உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.