மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா! போரில் 4 இலட்சம் வீரர்களை களமிறக்க திட்டம்
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 இலட்சம் இராணுவ வீரர்களை ரஷ்யா களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்து போர்க்களத்திற்கு அனுப்பி வைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்யா தனது படை பலத்தை, 11 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக உயர்த்த எடுத்த முடிவின் அடிப்படையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
இருநாட்டு இராணுவத்துக்குமிடையில் மோதல்
கடந்த சில மாதங்களாக போரில் ரஷ்யா பெரியளவில் வெற்றி பெறாதது மற்றும் விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த படைத்திரட்டல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு இராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகின்றது.
இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரியளளவில் எதிர்தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவுக்கு எதிராக எதிர்தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.