மீண்டும் அதிகரிக்கும் போர் பதற்றம்! புடினின் மாளிகை அருகே பறந்த மர்ம ட்ரோன்களால் ஏற்பட்டுள்ள குழப்பம்
ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்ல கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டமையானது உக்ரைனின் திட்டமாக இருக்கக்கூடும் என்று ரஷ்ய வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை நள்ளிரவு கிரெம்ளின் மாளிகையை இலக்கு வைத்து பறந்த 2 ட்ரோன்களை, மின்சார ரேடார் மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இது பயங்கரவாத தாக்குதல் முயற்சி எனவும், இதற்கு உக்ரைன் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் எந்த பகுதியும் தங்கள் தாக்குதலுக்கு தப்பிக்க முடியாது என்பதை நிரூபிக்கவே உக்ரைன் டிரோன்களை அனுப்பி இருக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், ரஷ்ய கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட டிரோன்களுக்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.
மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்ய போர்
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலையடுத்து உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியேறி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் மற்றும் கவச வாகனங்களை தகர்க்கும் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.