பிரித்தானியாவில் கடும் தீவிரவாத அச்சுறுத்தல்! வழமைக்கு மாறாக அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை "கணிசமான" என்பதிலிருந்து "கடுமையான" நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் வழமைக்கு மாறாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு இப்போது "அதிக சாத்தியம்" இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறைச் செயலர் பிரிதி படேல் இந்தனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் லிவர்பூலில் உள்ள வைத்தியசாலைக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை "கடுமையான" நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் அளவை அதிகரிப்பதற்கான முடிவை கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம் எடுத்துள்ளது.
அத்துடன், கடந்த மாதத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் காரணமாக இந்த முடிவெடுக்கப்பட்டதாக பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் எசெக்ஸில் வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டு சரியாக ஒரு மாதம் ஆகின்றது. அந்தத் தாக்குதலும் பயங்கரவாதச் சம்பவமாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலர் பிரிதி படேல்,
“பிரதமர் இன்று மதியம் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், நானும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த கூட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், முதலில், இந்த சம்பவம் ஒரு நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக பொலிஸார் தற்போது அறிவித்துள்ளனர். இப்போது பிரித்தானியாவின் அச்சுறுத்தல் அளவு கணிசமான நிலையில் இருந்து கடுமையாக நிலைக்கு அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
“அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது, நாங்கள் நேற்று பார்த்தது ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது. இப்போது, நாங்கள் எங்கள் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் காவல் சேவைகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நான்கு பேரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர், மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் குண்டு வெடித்த காரில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, கார் சாரதியின் துணிச்சல் மற்றும் தைரியத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டியுள்ளார்.
மேலும் "ஒரு மோசமான பேரழிவை" நிறுத்தியதற்காக காரின் சாரதி ஹீரோவாகப் பாராட்டப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.