பிரித்தானிய தடையால் நிலை தடுமாறும் அநுர அரசு
பிரித்தானியாவின் தடை விவகாரத்தில் ஒரு நாட்டுக்குள்ளேயே சிங்கள தேசமும், தமிழத்தேசமும், வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்தமை சமூகமளவில் இலங்கை இரண்டாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் தனது அரசியல் ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரித்தானிய அரசாங்கம் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனகொட, தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தமை இலங்கைத் தீவில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தடை விவகாரம்
இதற்கு முன்னர் அமெரிக்காவும், கனடாவும், தடைகளை விதித்த போது கூட இவ்வளவு அதிர்வலைகள் உருவாகி இருக்கவில்லை.
அமெரிக்கா, கனடாவை விட பிரித்தானியாவுடன் சிங்கள தேசத்துக்குள்ள மரபு ரீதியான நெருங்கிய தொடர்பு இதற்கு காரணம் எனலாம். வழக்கம்போல சிங்களத் தரப்பிலிருந்து பலத்த கண்டனக்குரல்கள் வெளிவந்துள்ளன.
அதே வேளை தமிழ்த்தரப்பு இந்தத்தடைகளை வரவேற்றுள்ளது. அநுர அரசாங்கத்திற்கு இது ஒரு தர்ம சங்கடமான நிலைதான். இந்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக தடுமாறிக் கொண்டிருந்தது.
நான்கு பிரிவாக கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இறுதியில் பெருந்தேசிய வாத அலைக்கு அஞ்சியும், படையினரை பாதுகாப்பதற்காகவும், தேர்தல் காலத்தில் அரசாங்கத் தரப்பிற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், கண்டனத்தை தெரிவிப்பது என தீர்மானித்தது. பிரித்தானிய தூதுவர் நேரடியாக அழைக்கப்பட்டு அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
பொறுப்பு கூறல் தொடர்பாக இலங்கை உள்ளகப் பொறிமுறைகளை ஆரம்பித்துள்ளது என்றும், அந்நிலையில் இத்தடைகள் அச் செயற்பாடுகளையும், அதன் வழி நல்லிணக்க முயற்சிகளையும், பாதிக்கும் என்றும் பிரித்தானிய தூதுவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு இந்த விடயத்தில் உள்ள அச்சம் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதனை பின்பற்ற முயற்சிக்கும் என்பதேயாகும். குறிப்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் இவ்வாறு தடைகளை விதித்தால் அது இலங்கையை மிக மோசமாகவே பாதிக்கும். இதைவிட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காமல் போகும் என்ற அச்சமும் அரசாங்கத்திற்கு உண்டு.
ஏற்கனவே அமெரிக்கா இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 வீத வரிகளை விதித்த நிலையில் ஜி எஸ். பி பிளஸ் சலுகையும் கிடைக்காது போனால் இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தில் விழ வேண்டிய நிலை ஏற்படும். பொருளாதாரம் சற்று மேலெழும்புகின்ற நிலையில் இந்தத்தடை அந்த மேலெழும்புகைக்கும் நெருக்கடியைக் கொடுக்கும்.
2028 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிநாட்டுக் கடன்களை மீளக் கொடுக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உண்டு. முன்னர் கூறியது போல இந்தத் தடைக்கு முன்னரே அமெரிக்காவும், கனடாவும் தடைகளை விதித்திருந்தன. அமெரிக்கா வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு எதிராக தடைகளை விதித்திருந்தது. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடைகளை விதித்தது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராட்சி, சிப்பாய் ரத்னாயக்கா ஆகியோருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடைகளை விதித்தது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி மேஜர் புலவத்தவுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், தடைகளை விதித்தது. 2023 ஏப்ரல் 27ஆம் திகதி கடற்படைத்தளபதி வசந்த கரன்னகொடவுக்கு தடைகளை விதித்தது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சிறீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்றி அதிகாரி கபில சந்திர சேனாவுக்கும், முன்னாள் ரஸ்ய தூதுவர் உதய வீரதுங்காவிற்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடைகளை விதித்தது. இனிவரும் காலங்களில் மேலும் பல நபர்களுக்கு அமெரிக்கா தடைகளை விதிக்கக்கூடும்.
இனப் படுகொலை
2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சிப்பாய் ரத்நாயக்கா, கடற்படைப் புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராட்சி ஆகியோருக்கு எதிராக கனடா தடைகளை விதித்தது. அவர்களின் சொத்துக்களை முடக்கவும் தீர்மானித்தது. அமெரிக்காவும், பிரித்தானியாவும் படையினருக்கு தடைகளை விதித்தார்களே தவிர படையினருக்கு கட்டளை விடுத்த அரசின் தலைவர்களுக்கு தடைகளை விதிக்கவில்லை.
கனடா ஒரு படி மேலே சென்று அரசின் தலைவர்களுக்கும் தடைகளை விதித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அரசியல் தீர்மானங்களையும் எடுத்திருந்தது. இனப் படுகொலை தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை இந்த வகையிலேயேயாகும்.
ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் இதற்கு மேலாக இன அழிப்பு வாரத்தையே பிரகடனப்படுத்தியிருந்தது. முன்னரும்கூறியது போல சிங்கள தேசத்தின் எதிர்வினை கடுமையானதாக இருந்தது. ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்ற அரசாங்கத்தின் எதிர்வினைக்கு அப்பால் மஹிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, விமல்வீரவன்ச ஆகியோரும் எதிர் வினைகளை ஆற்றியிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச “எனது கட்டளைகளை படையினர் நடைமுறைப்படுத்தினர். படையினர் எவ்வித குற்றங்களையும் இழைக்கவில்லை” என குறிப்பிட்டார். சரத் பொன்சேக்கா “குற்றமிழைத்தவர்களை விசாரணை செய்யலாம் ஆனால் படையினர் குற்றமிழைக்கவில்லை” என குறிப்பிட்டார். சவேந்திர சில்வா எந்த வித குற்றங்களை இழைக்கவில்லை எனக் கூறி அவரைக் காப்பாற்றவும் முனைந்திருந்தார்.
விமல் வீரவன்ச தடைக்கு கண்டனத்தை தெரிவித்ததோடு படைத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவிற்கு ஏன் தடைகளை விதிக்கவில்லை என்ற கேள்வியையும் கேட்டிருந்தார். இதற்கு மாறாக தமிழ் அரசியல் தலைவர்கள் நிலத்திலும், புலத்திலும் இதனை வரவேற்றிருந்தனர். தாயக அரசியல் தலைவர்கள் வரவேற்றதோடு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனும் வரவேற்றிருந்தார். இவ்வாறு ஒரு நாட்டுக்குள்ளேயே சிங்கள தேசமும், தமிழத்தேசமும், வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்தமை சமூகமளவில் இலங்கை இரண்டாகவே உள்ளதை வெளிக்காட்டியது.
அரசாங்கம் இறுக்கமான பதிலை முன்வைக்கவில்லை என்ற விமர்சனமும் சிங்களத்தரப்பினால் எழுப்பப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் 2028 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டிய நிலை ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை நிறுத்தப்படலாம் என்ற அச்சம் அரசாங்கம் மென்மையான கண்டனங்களை தெரிவிப்பதற்கு காரணங்களாக இருந்திருக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சுயாதீனமான நிலையைக் கொண்ட நாடல்ல. வல்லரசுகளின் தயவில் தங்கியிருக்கின்ற நாடாகவே உள்ளது.
புவிசார், பூகோள அரசியல் நெருக்கடியும் இலங்கைக்கு உள்ளது. மேற்குலகின் அழுத்தம் இந்தியாவின் காலடியில் விழுவதைத் தவிர இலங்கைக்கு வேறு தெரிவைக் கொடுக்காது. மேற்குலகத்தை சமாளிக்க கூடிய ஆற்றல் இந்தியாவிற்கே உண்டு. சீனாவிடம் தஞ்சமடைந்தால் விவகாரம் மேலும் இறுக்கமடையவே பார்க்கும். இந்த நெருக்கடி நிலையில் “இந்தியாவே இலங்கையை காப்பாற்றக்கூடிய ஒரே மீட்பர்” என்றும் “இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கைக்கும் இலங்கை தயாராக வேண்டும்” என்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டாக்டர் விஜயவர்த்தன கூறியிருக்கின்றார்.
2024 ஆம் ஆண்டு பிரித்தானியா பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிஉறவு பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மி கூறியிருக்கின்றார். போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறலை கோருவதும், தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம் என பிரித்தானியா கூறியிருக்கின்றது.
வேறு நாடுகள் தடைகளை விதிக்காவிட்டாலும் இந்தத் தடைகளைக்காட்டி தமது நாட்டிற்குள் சம்பந்தப்பட்டவர்களை அனுமதிக்க தயக்கத்தை காட்டும் என்ற அச்சமும் இலங்கைக்கு இருக்கின்றது. இந்தத் தடை புலம்பெயர் தமிழர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த இன்னொரு பெரிய வெற்றி என கூறலாம். அதுவும் தாயகத்திலிருந்து தமிழ்த்தேசியக்கட்சிகளின் எந்த ஒத்துழைப்புக்களும் இல்லாமல் புலம்பெயர் தமிழர்கள் இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை
தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது உட் கட்சிப் பிரச்சினைகளையே தீர்க்க முடியாத கையறு நிலையில் இருக்கின்றனர். சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கெல்லாம் அவற்றிற்கு நேரம் கிடைக்கப் போவதில்லை. எனினும் தாயகத்தில் காணாமல் போனவர்களது உறவுகள் நடாத்தும் தொடர்ச்சியான போராட்டங்களும் தடைகளை உருவாக்குவதில் பாதிப்பு செலுத்தியிருக்கின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் காணாமல் போனவர்களது உறவுகளின் போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது எனக் கூறியிருக்கின்றார். இவ்வளவு காலமும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சிகளுக்கே வெற்றி கிடைத்திருந்தன.
தற்போது முதன்முதலாக பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கலாம். புலம்பெயர் தமிழ் மக்களில் கனடாவுக்கு அடுத்தபடியாக ஒரு அரசியல் சமூகமாக வளர்ச்சியடைந்திருப்பது பிரித்தானியாவிலேயேயாகும்.
அங்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பல உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் உள்ளனர். சென்ற தேர்தலில் உமைகுமரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே! பிரித்தானிய தடைக்கு உமைகுமரனும் வரவேற்பளித்துள்ளார்.
வரலாற்றில் வல்லரசுகளின் நலன்களும் தமிழ் மக்களின் நலன்களும், சந்திக்கும் புள்ளி அவ்வப்போது ஏற்படலாம். அப்புள்ளியைப் பலப்படுத்தி தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்கு தமிழ்த்தரப்பு ஒருபோதும் தவறக்கூடாது. இந்த பலப்படுத்தும் பணியில் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பாரிய பங்குண்டு.தவிர பிரித்தானியாவுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக பாரிய பொறுப்புண்டு. தமிழ் மக்கள் இன்று சந்தித்து வரும் ஒடுக்கு முறைகளுக்கு ஒரு வகையில் பிரித்தானியாவும் பொறுப்புக் கூற வேண்டும்.
அநுர அரசாங்கம்
பல்வேறு அரச, சமூக, பண்பாட்டு மரபுரிமைகளுடன் வாழ்ந்த மக்களை ஒற்றையாட்சி நிர்வாகக்கட்டமைப்புக்குள் இணைத்து ஒடுக்கு முறைக்கான வடிவத்தை கொடுத்தது பிரித்தானியாவேயாகும். சுதந்திரத்திற்கு முன்னர் தமிழ்த் தலைமைகள் இதனைச் சுட்டிக்காட்டிய போதும், பிரித்தானிய அரசு அதனை பெரியளவிற்கு கணக்கெடுக்கவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு இறைமைப் பிரச்சினையாகப் பார்க்காமல் சிறுபான்மையோர் குறைபாடுகளாக பார்த்து ஒட்டு வேலைகளில் மட்டுமே பிரித்தானியா கவனம் செலுத்தியது. சோல்பரி யாப்பிலும், டொனமூர் யாப்பிலும், காணப்பட்ட காப்பீட்டுப் பொதிகள் இதனையே வெளிக்காட்டின. பேரினவாத இன வெறிக்கு முன்னால் இந்தக்காப்பீடுகள் எல்லாம் பொசுங்கிப் போனதே வரலாறாகும்.
பிரித்தானியா தமிழ் மக்களின் நலன்களுக்காக இந்தத் தடைகளைக் கொண்டு வந்தது என கூறுவது இதனை மிகைப்படுத்திக் கூறுவதாகவே அமையும். பிரித்தானியா வாழ் தமிழர் நலன்களை பேணவேண்டிய கட்டாயம் அதற்கு இருந்தது என்பது உண்மை தான். அதைவிட பூகோள, சர்வதேச ஒழுங்கு சார் நலன்கள் அதற்கு பல இருந்தன. இதில் முதலாவது பூகோள அரசியல் சார் நலன்களாகும்.
அநுர அரசாங்கம் மனரீதியாக அமெரிக்கா - மேற்குலகம் -இந்திய நலன்களோடு இல்லை. அது மனரீதியாக சீனா சார்ந்தது. நிர்ப்பந்த ரீதியாகத்தான் அது நடுநிலை வகிப்பதாகக் காட்டிக் கொள்கின்றது. இது இந்த வல்லரசுகளுக்கு நன்றாகவே தெரியும். தடையின் பிரதான நோக்கம் இலங்கை அரசாங்கம் சீனா நோக்கி சாய்வதை கட்டுக்குள் வைத்திருப்பது தான்.
இரண்டாவது காரணம் பெருந்தேசியவாதிகளை கட்டுக்குள் வைத்திருப்பது. மகிந்தர் மீளவும் எழுச்சியடைவதை இவ்வல்லரசுகள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பெருந்தேசியவாத சக்திகள் இவ்வல்லரசுகளின் பூகோள நலன்களுக்கு பாரிய தடைகளாக உள்ளன. பெருந்தேசிய வாதம் கட்டி எழுப்பப்பட்டதே மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற தூண்களில் தான்.
மூன்றாவது இலங்கை அரசாட்சியில் இராணுவத்தின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்துவது. பாகிஸ்தான் இராணுவம் போல இல்லாவிட்டாலும், அதற்கு கிட்டவுள்ள ஒரு சக்தியாகவே இலங்கையில் இராணுவம் உள்ளது. அரசின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்படும் ஆற்றல் இராணுவத்திற்கு உண்டு. அநுர அரசாங்கம் இதுவிடயத்தில் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது எனலாம்.
வல்லரசுகளின் நலன்களுக்கு இராணுவம் பாரிய தடையாக உள்ளது. நான்காவது சர்வதேச ஒழுங்கைப் பேணுவதற்கு இத்தடைகள் அவசியமாக இருப்பதாகும். சர்வதேச ஒழுங்கைப் பேணுவதற்கு மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்தல், என்பன மிகவும் அவசியமானதாகும்.
பொறுப்புக் கூறலில் இருந்து விலகுதல், தண்டனை விலக்கீடு, ஒரு கலாச்சாரமாக வளருதல், சர்வதேச ஒழுங்கிற்கு மிகவும் பாதகமானது. ஐந்தாவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தேக்க நிலையை குறைந்த மட்டத்திலாவது சீர் செய்தலாகும்.
இலங்கைக்கான போர் குற்றங்களைப் பொறுத்தவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இயலுமை முடிந்து விட்டது. அடுத்த கட்டமாக நாடுகளின் பொறுப்பு சார் பணிக்கு செல்ல வேண்டும். குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது பூகோள அரசியல் நலன்களுக்கும், இந்தியாவின் பிராந்திய சார் நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் வல்லரசுகள் விரும்பவில்லை.
அதேவேளை கோவையை மூடுவதற்கும் தயாராக இல்லை. இதனாலேயே இடைக்கால செயல்பாடாக தடையை தேர்ந்தெடுத்திருக்கின்றது.
எது எப்படி இருந்த போதும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது சாதகமான ஒரு முன்னேற்றம் தான். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு பொறுப்பு கூறல் மிகவும் அவசியம். வரலாறு எப்போதும் முன்னோக்கி தான் செல்லும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |