பிரித்தானியாவில் கோடீஸ்வரர்களுக்கு விதிக்கப்படவுள்ள வரி: ரிஷி சுனக் குடும்பத்தினருக்கு காத்திருக்கும் சிக்கல்
பிரித்தானியாவில் செல்வந்தர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் 350 குடும்பங்களின் சொத்து வரியை அதிகரிக்க வரிவிதிப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 22 பில்லியன் பவுண்டுகள் வரையில் திரட்ட முடியும் எனவும், குறித்த தொகையை பயன்படுத்தி ஆண்டுக்கு 145,000 குடியிருப்புகளை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி 10 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான சொத்துடைய குடும்பங்களுக்கு 2 சதவீதம் வரி விதிக்க நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மேலும், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலான சாதாரண மக்கள் வாழ்க்கை செலவு நெருக்கடியால் திணறும் போது, செல்வந்தர்கள் மேலதிகமாக சொத்துக்களை திரட்டி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
250 பெரும் செல்வந்தர்கள் குடும்பம்
பிரித்தானியாவில் உள்ள 250 பெரும் செல்வந்தர்கள் குடும்பங்களின் மொத்த சொத்துமதிப்பானது 748 பில்லியன் பவுண்டுகள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 275வது இடத்தில் பிரதமர் சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா குடும்பத்தினர் உள்ளனர். அவர்களின் சொத்துமதிப்பு 529 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2020ல் 147 பேர்கள் பிரித்தானிய கோடீஸ்வரர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 171 என அதிகரித்துள்ளது. மேலும், சராசரியாக ஒவ்வொருவரின் சொத்துமதிப்பும் 4 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |