ரிஷி சுனக்கிற்கு தொடரும் நெருக்கடி: அமைச்சர் ஒருவர் இராஜினாமா!
பிரித்தானியாவின் பொருளாதாரம் மோசமான நிலையினை எதிர்கொண்டுள்ளது. பணவீக்க உயர்வால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பிரித்தானியாவில் அரசியல் நெருக்கடி நிலையும் தற்போது அதிகரித்து வருகின்றது.
ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராகப் பதவியேற்றிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகளின் அழுத்தமும், எதிர்ப்பும் மிகவும் அதிகமாக உள்ளது.
சர்ச்சையில் சிக்கிய சர் கவின் வில்லியம்சன்
இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி சர் கவின் வில்லியம்சன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது டோரி எம்.பி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான டோரி எம்.பி ஒருவருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரச ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும் எம்.பி சர் கவின் வில்லியம்சன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக சர் கவின் வில்லியம்சன்(Sir Gavin Williamson ) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், தன் நடத்தை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள கறையை துடைப்பதே தற்போது தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டுகள் முழுவதும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நற்செயல்களில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்றும், தனது இராஜினாமாவிற்காக எந்தவொரு பணி நீக்க ஊதியமும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சர் கவின் வில்லியம்சன் தனது இராஜினாமா கடிதத்தில், அரசாங்கத்தில் இருந்து விலகுவது உண்மையில் மிகவும் வருத்தம், ஆனால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தன்னுடைய முழு ஆதரவும் பின் இருக்கையில் இருந்து முழு மனதுடன் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரிஷி சுனக்
இதையடுத்து சர் கவின் வில்லியம்சனின் இராஜினாமாவை மிகப்பெரிய வருத்தத்துடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக், தனிப்பட்ட ஆதரவிற்கும் விசுவாசத்திற்கும் சர் கவின் வில்லியம்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்த கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் உங்களுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேபர் கட்சி
ஆனால் எதிர்க்கட்சியான லேபர் கட்சி இதை ரிஷி சுனக்-ன் மோசமான தீர்ப்பு மற்றும் மோசமான தலைமைக்கான அடையாளம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
மேலும் லேபர் கட்சியின் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் ஒவ்வொரு வாரமும் நடக்கும் பிரதமர் கேள்வி நேரத்தில் இதுகுறித்த கேள்விகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.