மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம் - அகதிகளை நாடு கடத்த தயாராகும் பிரித்தானியா
பிரித்தானியாவில் இருந்து அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வந்து புகலிடம் கோரியவர்களை அடுத்த வாரம் ருவாண்டாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தடுப்பதற்கான தடை உத்தரவை கோரிலண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மனுவை இன்றைய தினம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அடுத்த வாரம் அகதிகளை அழைத்துக்கொண்டு முதல் விமானம் பிரித்தானியாவில் இருந்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக தொண்டு நிறுவனங்களும் ஒரு தொழிற்சங்கமும் இணைந்து மனுவை தாக்கல் செய்திருந்தன.
மேன்முறையீடு செய்ய அனுமதி
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பாதுகாப்பற்றது என்று நீதினமறில் கூறிய போதிலும் அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் திட்டமிடப்பட்டபடி அகதிகளை அழைத்துக்கொண்டு விமானம் பறக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, "உள்துறை செயலாளர் (பிரிதி படேல்) குடியேற்ற முடிவுகளை செயல்படுத்துவதில் பொது நலன் உள்ளது." என நீதிபதி ஜொனாதன் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மனித உரிமை அமைப்புகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.