ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி!
கோவிட் தொற்று எதிரான ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா அரசு வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கோவிட் தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை பிரித்தானியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதன்படி, அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கோவிட் தடுப்பூசிகளுக்கு பிரித்தானியா அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கருத்து வெளியிடுகையில்,
“நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் செய்தி இது. அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு டோஸ் (ஜோன்சன் அன்ட் ஜோன்சன்) தடுப்பூசிகள் வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் அண்மை நாட்களாகத் தொற்று அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.