சீனாவின் கைகளில் உகண்டா விமான நிலையம் வீழ்ந்தது எப்படி?
ஆபிரிக்க நாடான உகண்டாவின் கம்பாலா நகரில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையம், சீனாவின் கடனுக்கு மூழ்கி விட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள அந்நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான என்டபே விமான நிலையத்தை சீனாவின் எக்சிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உகண்டா அரசாங்கம், எக்சிம் வங்கியிடம் 207 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்று விமான நிலையத்தை விரிவுப்படுத்தி அபிவிருத்தி செய்துள்ளது.
எனினும் சீன வங்கியிடம் பெற்ற கடனை உகண்டா அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக விமான நிலையம், சீனாவின் எக்சிம் வங்கியின் கடனுக்கு மூழ்கியுள்ளது.
என்டபே விமான நிலையத்தை விரிவுப்படுத்த உகண்டா ஜனாதிபதி யோவேரி முசவேனியின் அரசாங்கம் 7 வருட நிவாரண காலம் மற்றும் 20 வருடங்களில் செலுத்தி முடிக்கும் நிபந்தனையின் கீழ் இந்த கடனை பெற்றிருந்தது எனக் கூறப்படுகிறது.
எனினும் உகண்டாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி முசவேனி அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சீன அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் நிபந்தனைகளை திருத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.
கடன் நிபந்தனைகளை மாற்ற எக்சிம் வங்கி மறுத்து விட்டது. இதன் காரணமாக என்டபே விமான நிலையம் மற்றும் அதன் சொத்துக்களை சீன வங்கிக்கு வழங்க நேரிட்டுள்ளதுதாக தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் சீனாவின் வன் பெல்ட், வன் ரோட் திட்டங்கள் உலம் முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை சீனாவிடம் இருந்து பெற்ற 1.1 பில்லியன் டொலர் கடனுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது.
சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியது.
அதேவேளை பாகிஸ்தானில் துறைமுகம், வீதிகள், தொடருந்து பாதைகள், எரிபொருள் குழாய் அமைப்பு உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட் வருகின்றன.
அத்துடன் பாகிஸ்தானில் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டமும் இதில் அடங்கும்.
அத்துடன் உகண்டாவின் என்டேபே விமான நிலையம் உலக பிரத்தி பெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புப்பட்டுள்ளது.
உகண்டாவின் ஜனாதிபதியாக இடி அமீன் பதவி வகித்த போது, கடந்த 1976 ஆம் ஆண்டு பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் குழு, இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸின் பாரீஸ் நோக்கிச் சென்ற பிரான்ஸ் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை கடத்திச் சென்றனர்.
248 பயணிகளுடன் கூடிய இந்த விமானம் ஏதேன்ஸ், பெங்காசி ஊடாக உகண்டாவின் என்டேபே விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேல் படையினர், பாலஸ்தீன போராளி குழுவிடம் பணயக் கைதிகளாக சிக்கி இருந்த விமான பயணிகளை மீட்க மிகத் திறமையான நடவடிக்கையை மேற்கொணடனர்.
“ ஒபரேஷைன் தண்டர்போல்ட்” என்று அந்த நடவடிக்கைக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. இஸ்ரேல் படையினர் இராணுவ நடவடிக்கையின் மூலம் விமானப் பயணிகளை மீட்டனர்.
இந்த “தண்டர்போல்ட்” நடவடிக்கை காரணமாக என்டேபே விமான நிலையம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.