பெண்களுக்கு மீதான வன்முறைக்கு எதிர்வினை ஆற்றப் பழக வேண்டும்: உதயனி நவரட்ணம் தெரிவிப்பு
பெண்களுக்கு எதிரான வன்முறை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் எதிர் வினையாற்றும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்னம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (26.03.2024) உள்ள யூனியன் வங்கியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆண்களை விட பெண்களுக்கே அதிகமான வன்முறைகள் ஏற்படுகிறது. பெண்களுக்கு வேலை தளங்களிலும், வேலைக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலும் பார்வை தொடுகை மற்றும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் வன்முறைகள் ஏற்படுகிறது.
வீடுகளில் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறைகளை வீட்டு வன்முறைகள் என அழைப்பதோடு இவை பெரும்பாலும் கணவன்மார்களால் இடம்பெறுகிறது.
பெண்களுக்கு பார்வை தொடுகை மற்றும் வார்த்தைப் பிரயோகம் மூலம் இடம் பெறும் உடல் ரீதியான வன்முறை சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லும் ஆதாரங்களை கேட்கும் போது பாதிக்கப்பட்ட பெண்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும் பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்தி குரல் கொடுப்பவர்களை சமூகவலைத்தளங்களில் உடல் ரீதியான வன்முறைகள் இடம்பெறுகிறது.
தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு தொழில் புரியும் இடம் மற்றும் வீடுகளில் இரட்டைச் சுமை ஏற்படுவதாக வல்லுனர்கள் கூறும் நிலையில் தற்போது சமூக சேவைகளில் ஈடுபடும் பெண்களுக்கு மூன்றாவது சுமையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் உடல் ரீதியான சீண்டல்களை தடுப்பதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் விழிப்போடு செயற்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் யூனியன் வங்கியின் வடக்கு கிழக்கு முகாமையாளர் க.நிஷாகரன் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மிதிலா கெளதமன் யுன்டிபி நிறுவன அதிகாரி வைதேகி நரேந்திரன் வன்னி கஜு நிறுவன ஸ்தாபகர் ஜெஸ்மின் ஜெயமலர் சட்டத்தரணி கார்த்திகா மற்றும் பெண் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |