தமிழர் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ள புலனாய்வாளர்கள் (Video)
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கருவிகளாக தான் புலனாய்வு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் கையாளப்படுகின்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாங்கள் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தையோ அல்லது எதிர்ப்பினையோ காட்டுவதற்கு முற்படுகின்ற போது அங்கு வந்திருக்கும் புலனாய்வு பிரிவினரை எண்ணிப்பார்க்கும் போது அளவிற்கு அதிகமானோர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த நாட்டில் இவ்வளவு தூரம் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால் இந்த பாதுகாப்பு பிரிவினருக்கு அவர்கள் செலவு செய்கின்ற அந்த பணத்தொகை என்பது அபாரமாக காணப்படுகிறது.
இதேவேளை இலங்கை அரச கட்டமைப்பிலுள்ள அத்தனை புலனாய்வாளர்களும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தானா தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அது உண்மையான விடயம்.
ஏனென்றால் இன ஒடுக்குமுறை. போராட்ட சூழ்நிலை வடக்கு, கிழக்கில் தான் கடந்த காலங்களில் காணப்பட்டது அல்லது அடிபணியாத குணாம்சம் காணப்பட்டது.
எங்கள் நிலத்தில் நாங்கள் கௌரவமாக மரியாதையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக, சுயநிர்ணயம் மற்றும் சுயகௌரவம் என்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக இவர்களை எப்படியாவது அடக்கி ஒடுக்கி அவர்களின் முனைப்பான செயற்பாடுகளை ஒரு அடிமைத்துவ நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் செயற்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.