நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு பல பகுதிகளில் எதிர்ப்பு
திருகோணமலை - மூதூர் மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்ட பகுதியில் நேற்று (20.09.2023) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதல் சம்பவத்திற்கு நீதிக்கோரியும் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (20.09.2023) மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை - மூதூர் பாலநகர்ச் சந்தியில் இருந்து கையில் பதாதைகளை தாங்கியவாறும் எதிர்ப்புக் கோஷங்களை வெளிப்படுத்தியவாறும் புளியடிச் சந்தி மணிக்கூட்டு கோபுரம்வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் 56 ல் இலங்கையா? எம் இனத்துக்காக மரணித்தவர்களை நினைவுகூற அனுமதிக்கொடு , பாரததேசம் மட்டுமல்ல சர்வதேசத்திற்கே அகிம்சையை போதித்த பெரும் மகான் தியாக தீபம் திலீபன், போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றைய தினம் (20.09.2023) யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.
இதேவேளை நாளைய தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை மறுதினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்படவுள்ளது.
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் - சாணக்கியனிற்கு இடம்பெறலாம்! பகிரங்க எச்சரிக்கை! (video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |