கொக்கட்டிச்சோலையிலிருந்து சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய சந்தேகநபர்கள் இருவர் கைது (video)
மட்டக்களப்பு - கொக்கட்டிசோலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடிக்கு 6 மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற இருவரை மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தன்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (19.04.2023 ) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவில் அடிப்படையில் குற்ற விசாரணைப்பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார்
இதனையடுத்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனத்தை பின் தொடர்ந்து அதனை காத்தான்குடி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து சோதனையிட்டுள்ளனர்.
இதேவேளை போலி அனுமதிப்பத்திரம் ஊடாக சட்டவிரோதமாக கடத்தி செல்வதை கண்டறிந்ததை அடுத்து இருவரை கைது செய்ததுள்ளதுடன், 6 மாடுகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்கப் ரக வாகனம் ஒன்றையும் மீட்டு குற்ற விசாரணைப் பிரிவினர், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 35, 37 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி சென்றமை, போலி ஆவணங்கள் தயாரித்தமை, மாடுகளை சிறிய பகுதியில் அடைத்து சித்திரவதை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.








இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
