மன்னாரில் 16 கிலோகிராம் போதைப்பொருளுடன் 2 நபர்கள் கைது (video)
மன்னாரில் இரு வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரு சந்தேகநபர்கள் மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து நேற்றைய தினம் (31.03.2023) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மன்னார் கொன் வன்ற் வீதி மற்றும் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகாமையில் வைத்தும் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
அதனடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொன்வன்ற் வீதி மற்றும் மன்னார் தலைமன்னார் வீதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் ஜே.ஆர்.எஸ்.வீட்டுதிட்டம் சின்னக் கடையை சேர்ந்த 37 வயது நபரிடமிருந்து 6.30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கட்டுக்காரன் குடியிருப்பை சேர்ந்த 28 வயது நபரிடம் இருந்து தலைமன்னார் வீதியில் கெப் வாகனத்தில் வைத்து 10.60 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஏர்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் ரத்ன மணல தலைமையிலான பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்ட பின், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் வாகனங்களுடன் சந்தேகநபர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.