கிளிநொச்சியில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம் (Photos)
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(07.12.2023) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே பாலம் உடைந்து விழுந்ததில் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து சிரமங்கள்
இந்த பாலம் 2019ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன், அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக ஏறத்தாழ 11 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது வரிப்பணத்தில் பாரிய நிதியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் உடைந்தமை தொடர்பில் ஆதங்கம் வெளியிடும் மக்கள், தமது வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உடைந்த பாலத்தை உடனடியாக கரைச்சி பிரதேச சபையினர் நிரந்தரமான அபிவிருத்தி ஊடாக சீர்செய்து தர வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
குறித்த பாலம் உடைந்து விழுந்த நிலையில் காணப்படுவதால், மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் வீதி மேலும் சேதமடையும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |