வீதியில் பொலிஸ் அதிகாரியை புரட்டி போட்டு தாக்கிய இருவர்
அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் புரட்டி போட்டு கடுமையாக தாக்கியுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரியை வீதியில் தள்ளி கடுமையாக தாக்கிய நபர்கள்
இந்த பொலிஸ் சார்ஜன்ட் மிகிந்தலைக்கு சென்று பின்னர் திருகோணமலை வீதியலில் கருவலகஸ்வெவ விகாரைக்கு எதிரில் உள்ள கடை ஒன்றுக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், பொலிஸ் சார்ஜன்டை வீதியில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.
அருகில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அதனை தடுக்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கும் நீல நிற டி சேர்ட் மற்றும் காக்கி காற்சட்டையை அணிந்திருந்தார்.
ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டு பேர் நீண்ட நேரமாக பொலிஸ் சார்ஜன்டை தாக்கியதாக அதனை காணொளியில் பதிவு செய்த ஒருவர் கூறியுள்ளார். தாக்குதல் நடத்திய நபர்கள் போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு பொலிஸாரை அனுப்பியுள்ளார். பொலிஸார் அங்கு சென்ற போது, சம்பவம் முடிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து ஏற்கனவே சென்று விட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி முறைப்பாடு செய்யவில்லை
மிகிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்திருந்த போதிலும் அவர் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரி ஒருவரை நடு வீதியில் வைத்து மோசமாக தாக்கியமை பாரதூரமான குற்றம் என்பதால், துரிதமாக சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.