ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரிகள் இருவரைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் பண்டார தலைமையில் பொலிஸார் மற்றும் மாவட்ட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று இரவு பிறைந்துறைச்சேனை பகுதியில் உள்ள குறித்த இரு வீடுகளை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 37 வயதுடைய ஒருவரை 940 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடனும், 18 வயதுடைய ஒருவரை 18 பக்கெற்றுக்கள் கொண்ட 1570 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் பிறைந்துறைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

