இருவேறு விபத்துகள்! எழுவர் படுகாயம்
திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி சாலியபுர சத்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு (23) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் கந்தளாய், கந்தலாவ பகுதியைச் சேர்ந்த சானுக்க தனபால (35 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவரை ஏற்றி வந்ததாகவும் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்வேலி பூதவராயர் மடம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 07 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளை உள்ளிட்ட இருவரை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளை , பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து (மினி வான்) அவர்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் , அவர்களை பாடசாலைக்கு அழைத்து சென்ற குடும்ப பெண்ணும் காயங்களுக்கு உள்ளான நிலையில் , அங்கிருந்தவர்கள் மீட்டு கோப்பாய் வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
கோப்பாய் வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.