ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று (09.04.2026) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் இருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 10 மணியளவில் ஏறாவூர் முதலாம் பிரிவு நூலக வீதியிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியிடம் இருந்து 5840 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றிய நிலையில் வீட்டை சோதனையிட்ட போது மேலும் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
அத்துடன் அங்கு போதை வியாபாரியுடன் இருந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு கொஸ்தாப்பர் உட்பட இருவரையும் கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.