பாடசாலையில் கணினிகள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணினி அறைக் கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலை பூட்டப்பட்டிருந்த நிலையில் பாடசாலையின் கணினி பிரிவு அறை கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள், ஒரு மவூஸ், ஒரு கீபோட் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பாடசாலைக்கு அருகிலுள்ள 22, 24 வயதுடைய இருவரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



