பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு: 7 பேர் கொடூரக்கொலை!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் குறைந்தது 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(20.6.2026) இடம்பெற்றுள்ளது.
பயணிகள் சென்ற ஒரு தனியார் பிக்-அப் ரக வாகனத்தைக் குறிவைத்து, தொலைஇயக்கி மூலம் இயக்கப்படும் ஐஇடி வெடிகுண்டு கொண்டு முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொலை
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக மற்றொரு காரில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றபோது, மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்து இரண்டாவது குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டைத் தாக்குதலில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு ஆயுதமேந்திய அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்கள் இப்பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷேபாஸ் ஷெரீப், இதற்கு காரணமானவர்கள் மீட்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
சமீபத்திய மாதங்களாக ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எல்லையோரப் பகுதிகள் பெரும்பாலும் மூடப்பட்டு இருதரப்பு வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.