ஒரே நேரத்தில் ஓய்வுபெற்ற இரு மடங்கு ஆசிரியர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வழமையை விட, கடந்த வருடத்தில் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளமையே ஆசிரியர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழமையாக வருடந்தோறும் 5,000 அல்லது 6,000 ஆசிரியர்களே ஓய்வு பெற்று செல்வதுண்டு. ஆனால் கடந்த வருடம் அது இரண்டு மடங்காகியுள்ளது. இதனாலேயே, ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை
இதனை நிவர்த்திக்க கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இவர்கள், தேசிய பாடசாலை மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் பணிபுரிவர். இதற்கு மேலதிகமாக, 26,000 பட்டதாரிகளை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். எனினும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் , தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததும் பரீட்சைகள் நடத்தப்பட்டு இவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தவிர மேலும் 06 ஆயிரம் பட்டதாரிகளை குறிப்பிட்ட பாடங்களுக்காக தேசிய மற்றும் மாகாணமட்ட பாடசாலைகளில் நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேவேளை, மேற்படி 26,000 பேரை நியமிக்கும் செயற்பாடுகளில் அரச சேவையில் உதவியாளர்களாக பணியாற்றியவர்களும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கும் இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களும் பரீட்சை எழுதி ஆசிரியர் நியமனத்திற்குள் இணைந்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.