இஸ்ரேலுக்கு எதிரான வழக்கில் தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் துருக்கி அதிகாரப்பூர்வமாக இணைவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனான சந்திப்பின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஹக்கன், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கில் துருக்கி தலையீட இருப்பதாகவும் அதற்கான நடைமுறைகள் முடிந்ததும் துருக்கி வழக்கில் இணையும் எனவும் தெரிவித்துள்ளார்.
“இந்த நடவடிக்கை மூலமாக சர்வதேச நீதிமன்றத்தில் நடைமுறைகள் சரியான திசையில் நடக்கும் என நாங்கள் நம்புகிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் படுகொலை மாநாட்டின் நெறிமுறைகளை மீறி இஸ்ரேல் காஸாவில் தாக்குதல் நடத்திவருவதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் துருக்கியும் ஒன்று.
மேலும் உலக அரங்கில் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஹமாஸ் குழுவை பாலஸ்தீன நிலம் மற்றும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என துருக்கி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |