துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மத்திய துருக்கியில் இன்று ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய துருக்கியில் கடந்த 66 மணி நேரத்தில் உணரப்பட்ட 37வது நிலநடுக்கம் இதுவாகும் என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
கடந்த 6ம் திகதி துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவிற்குள்ளான நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம்
5,20,000 அடுக்குமாடி குடியிருப்புகளுடன் கூடிய 1,60,000 கட்டிடங்கள் பெப்ரவரி 6 அன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தன அல்லது கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் (AFAD) கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கங்களால் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44,218 ஆக உயர்ந்துள்ளது. சிரியாவில் 5900க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சேதமடைந்த வீடுகளை ஒரு வருடத்திற்குள் புனரமைப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
