என் காலடியில் விழுந்து கிடக்கிறார்! சவுதி அரேபியாவின் இளவரசர் குறித்து ட்ரம்பின் கடும் பேச்சு
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புளோரிடாவில் நடைபெற்ற சவுதி ஆதரவு முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், தனது ஆட்சியின் கீழ் அமெரிக்கா மீண்டும் ஒரு வல்லரசாக உருவெடுத்திருப்பதை சவுதி இளவரசர் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.
"கடந்த ஓராண்டிற்கு முன்பு அமெரிக்கா ஒரு வலுவிழந்த நாடாக இருந்ததாக சவுதி இளவரசர் என்னிடம் கூறினார். ஆனால் இப்போது அமெரிக்கா உலகின் மிகச்சிறந்த நாடாக மாறியுள்ளது.
மோசமான பேச்சு
நான் ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியாக இருப்பேன் என்று அவர் நினைத்தார். ஆனால் இப்போது அவர் எனது காலடியில் விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இப்போது அவர் என்னிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்," எனத் தெரிவித்தார்.
இருப்பினும், அடுத்த சில நிமிடங்களிலேயே தனது தொனியை மாற்றிக்கொண்ட ட்ரம்ப், சவுதி இளவரசரை "ஒரு அற்புதமான மனிதர்" என்றும் "சிறந்த போர்வீரன்" என்றும் புகழ்ந்து தள்ளினார்.

ஈரானுக்கு எதிரான போரில் சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்குப் பக்கபலமாக நிற்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இதுவரை 1,900 ஈரானியர்கள் உட்பட 4,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஈரானுடன் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், அது வெறும் போரை நிறுத்துவதாக மட்டும் இருக்கக்கூடாது என வளைகுடா நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளன.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) பலத்தை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், எரிசக்தி விநியோகத்தை ஈரான் ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாத வகையில் ஒப்பந்தம் அமைய வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்