சர்வதேசத்தில் திடீர் சந்திப்பு: ரஸ்ய ஜனாதிபதியை சந்திக்கும் ட்ரம்ப்
தனக்கும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் எப்போது குறித்த சந்திப்பு நடக்கும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
அவர் தன்னை சந்திக்க விரும்புகிறார், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று புளோரிடாவில் வைத்து ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
எனினும், அமெரிக்கா இன்னும் முறையாக ஒரு சந்திப்பைக் கோரவில்லை என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக ரஸ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2025 ஜனவரி 20 ஆம் திகதி தாம் பதவியேற்றவுடன் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், அமெரிக்க இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான கீத் கெல்லாக்கை, உக்ரைன் மற்றும் ரஸ்யாவிற்கான சிறப்புத் தூதராக, ட்ரம்ப் நியமித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ட்ரம்ப் ஆதரவு சிந்தனை மையமான அமெரிக்கா ஃபர்ஸ்ட் பாலிசி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், அமெரிக்கா எவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது குறித்த தனது கருத்துக்களை கெல்லாக் முன்வைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மொஸ்கோவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டால் மட்டுமே உக்ரைன் தொடர்ந்தும் அமெரிக்க உதவியைப் பெற முடியும் என்றும் அவர் முன்மொழிந்திருந்தார்.
இருப்பினும், மொஸ்கோ அமைதிப் பேச்சுக்களில் பங்கேற்க மறுத்தால், அமெரிக்கா, உக்ரைனுக்கு தனது உதவியைத் தொடர வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருந்தார்.