ஈரான் பேச்சுவார்த்தை முறிவு குறித்து டொனால்ட் டிரம்ப் அதிரடி!
ஈரான் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளை நிறுத்துவது குறித்து ஈரான் இதுவரை தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு சாதகமான ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரானை காக்க வைப்பதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நாம் இதுவரை அதிகமாகப் பேசிவிட்டோம் என்று நினைக்கிறேன். எனவே, இப்போது நாமும் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது என டிரம்ப், பேச்சுவார்த்தைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்கா மீண்டும் முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கப் போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் பொருள் நாம் உடனடியாக அங்கு சென்று எல்லா இடங்களிலும் குண்டுகளை வீசப் போகிறோம் என்று அர்த்தமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தாக்குதல்கள் இல்லாவிட்டாலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் கடல்சார் தடைகள் தொடரும் என்பதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாங்கள் மௌனமாக இருப்போம். ஆனால் எங்களது கடற்படை முற்றுகையை தொடர்வோம். அந்த முற்றுகை என்பது ஒரு வலுவான எஃகு சுவர் போன்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அவசரமாக ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் அல்லது அழுத்தம் எதுவும் தமக்கு இல்லை என டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஈரானை விட அமெரிக்காவே தற்போதைய சூழலில் சாதகமான நிலையில் இருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.